×

குமரியில் அண்ணாமலை நடைபயணத்தில் அடாவடி: டெல்லியில் இருந்து போன் வரும் டி.எஸ்.பி.க்களை மிரட்டிய பா.ஜ.

நாகர்கோவில் : குமரியில் அண்ணாமலை நடைபயணத்தில், ‘டெல்லியில் இருந்து போன் வரும்’ என கூறி, டி.எஸ்.பி.க்களை பாஜவினர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்தார். நேற்று காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான நடை பயணத்தை களியக்காவிளை பஸ் நிலைய சந்திப்பில் இருந்து தொடங்கினார். முன்னதாக அப்பகுதியில் வாகனங்கள் செல்லவிடாமல் பாஜவினர் தடுத்ததால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுதந்திர தின நிகழ்ச்சிக்கு சென்றிருந்த மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். அப்பகுதியில் 4 மணி நேரம் கழித்து அண்ணாமலை சென்ற பின்னர், ஒரே சமயத்தில் வாகனங்கள் சென்றதால் மார்த்தாண்டம் பாலத்தின் கீழ் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

நடைபயணம் தொடங்குவதற்கு முன், திடீரென பிரதமர் மோடியின் முழு உருவ பொம்மையுடன் டெம்போவை கொண்டு வந்தனர். இதை டி.எஸ்.பி.க்கள் தங்கராமன், உதயசூரியன் ஆகியோர், முன் அனுமதி வாங்கவில்லை என்று கூறி தடுத்தனர். ஆனால் பாஜவினர் கடும் வாக்குவாதம் செய்தனர். ‘மற்ற மாவட்டத்துக்கும், குமரி மாவட்டத்துக்கும் வித்தியாசம் உண்டு. இன்னும் கொஞ்ச நேரத்தில் டெல்லியில் இருந்து உங்களுக்கு போன் வரும் பார்க்கிறீர்களா?’ என்று அவர்கள் போலீசாரை மிரட்டினர். அப்போது டி.எஸ்.பி.க்கள், ‘எங்கிருந்தும் போன் வரட்டும். விதிமுறை என்னவோ அதை தான் நாங்கள் கூறுகிறோம்’ என்றனர். இந்நிலையில் அண்ணாமலை வரவே, வாகனத்தை கொண்டு செல்வோம் என போலீசார் தடுத்தும் பாஜவினர் பிடிவாதமாக இருந்தனர். பின்னர் உயர் அதிகாரிகளிடம் பேசி, அந்த வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

The post குமரியில் அண்ணாமலை நடைபயணத்தில் அடாவடி: டெல்லியில் இருந்து போன் வரும் டி.எஸ்.பி.க்களை மிரட்டிய பா.ஜ. appeared first on Dinakaran.

Tags : Adavadi ,Annamalai walk ,BJP ,Delhi ,Nagercoil ,Kumari ,DSPs ,Annamalai ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...